×

ஊட்டியில் நாடாளுமன்ற தேர்தல் பயிற்சி முகாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகங்களை அறிந்து கொள்ள வேண்டும்

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை

ஊட்டி : நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி ெதாகுதியில் ேதர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிலை 1,2,3 மற்றும் 4 என 3391 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

இவர்களுக்கு கடந்த 22ம் தேதி சுழற்சி முறையில் தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள ரெக்ஸ் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. இதில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தலைமை வகித்து பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் ேபசுகையில், ‘தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குபதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை குறித்து ேதர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள் அறிந்து கொள்வது அவசியம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவதில் உள்ள சந்தேகங்களை இப்பயிற்சி முகாமில் அறிந்து கொள்ள வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பயிற்சியினை நன்கு பயன்படுத்தி கொண்டு வாக்குச்சாவடிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களின் பணி முக்கியமானது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 1,2,3 மற்றும் 4 ஆகியோருக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் – 4 பணியாற்றுவார்கள். நீலகிரியில் அவ்வாறு 69 வாக்குச்சாவடிகள் உள்ளது.

நீலகிரி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பயிற்சி முகாம் நடக்கிறது. 2வது கட்டமாக சுழற்சி முறையில் எந்த அலுவலர் எந்த வாக்குச்சாவடிக்கு பணியமர்த்தப்படுவார் என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டு 2வது கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படும். 2வது கட்ட பயிற்சி முகாம் 7, 16ம் தேதிகளிலும், 3வது கட்ட பயிற்சி வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் 18ம் தேதி நடத்தப்பட்டு அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.

தற்போது தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு தினத்தன்று காலையில் மண்டல அலுவலர்களுக்கு நினைவூட்டல் பயிற்சி அளிக்கப்படும், என்றார்.
தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்து, வாக்குச்சாவடி மையத்தில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் இயக்குவது குறித்தும், மின்னணு இயந்திரங்களில் கோளாறு இருந்தால் உடனடியாக மாற்றுவது, ஒட்டுப்பதிவு துவங்கும் முன், மாதிரி ஒட்டுப்பதிவு நடத்த வேண்டும்.

வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய ஆவணங்கள் பார்வையிடுதல் குறித்து விளக்கினார். மேலும் பதிவேடுகள் பார்வையிடுதல், பதிவேடுகளில் பதிவு செய்தல், வாக்காளர்களுக்கு அடையாள குறி இடுதல், தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் வாக்களிப்பதற்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை பெற்று கொண்டு வாக்களிக்க அனுமதி வழங்குதல், கண் பார்வையற்ற வாக்காளர்களுக்கு உதவி புரிதல், விவிபேட் குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மதியத்திற்கு பின்பு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்டிஒ மகராஜ், தாசில்தார் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளிலும் முதற்கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

The post ஊட்டியில் நாடாளுமன்ற தேர்தல் பயிற்சி முகாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகங்களை அறிந்து கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris ,Tamil Nadu ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...